Saturday, January 23, 2016

சமீபகால கணிப்பொறி சம்மந்தப்பட்ட சொற்களை தமிழில் சொல்வது எப்படி?

இனிய வணக்கங்கள்!

சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன்.  நான் கூர்ந்து கவனித்ததில் அவர் வேற்று மொழி கலப்பு எதுவும் இன்றி எளிய முறையில் தமிழில் பேசியது புலப்பட்டது.  எத்தனை முயற்ச்சித்தாலும் தப்ப இயலாத ஒன்று ஆங்கில கலப்படம்.  அவர் முடிந்த வரை ஆங்கில கலப்பு இல்லாத வகையில் தன் வரிகளை பேசியது வியக்க வைத்தது.

இணையதளத்தில் நாம் பெரும்பாலும் ஆங்கில சொற்களையே பயன்படுத்துகிறோம்.  ஓர் எடுத்துகாட்டு - "Browser - ல web-site address அடிச்சா, home page வரும்.  அதுல documents link click பண்ணா ஒரு list காட்டும். கீழ download link button ல click பண்ணு".

நம் மொழி எவ்வளவுக்கு எவ்வளவு பழமையானதோ, அவ்வளவுக்கு அவ்வளவு புதுமையானதும் கூட.  "லத்தின்" மற்றும் பிற தொன் மொழிகளைப்போல் இல்லாது  நம் மொழி காலத்தின் மாற்றத்திற்கேற்ப வளர்ந்து கொண்டே போகின்றது.  இதில் இன்னுமொரு சிறப்பும் உண்டு.  ஆங்கிலம் போன்ற மொழிகள் வளர்ச்சி என்கிற பெயரில் பிற மொழி சொற்களை தங்கள் மொழியில் பயன் படுத்துகிறார்கள்.  எடுத்துக்காட்டாக - "guru", "mantra" என்ற இந்திய அல்லது வடமொழி சொற்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.  தமிழர்கள் என்னதான் பேசும்பொழுது ஆங்கிலம் கலந்தாலும், நவீன ஆங்கில சொற்களுக்கான நிகர் சொற்கள் தமிழில் உண்டு.  குறிப்பாக நிகழ்கால தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சொற்கள்.

ஒரு சின்ன பட்டியல் இதோ!

 1.  Computer - கணிப்பொறி
 2.  Software - மென்பொருள்
 3.  Internet - இணையம் (அ) இணையத்தளம்
 4.  communication - தொடர்பு
 5.  Information Technology - தகவல் தொழில்நுட்பம்.
 6.  Link - இணைப்பு
 7.  Hyperlink - மீத்தொடுப்பு (அ) மிகை
 8.  Click - சொடுக்கு
 9.  Double-click - இரட்டை சொடுக்கு
10. Web Browser - இனைய உலாவி (அ) வலை உலாவி
11.  Document - ஆவணம்
12.  Download - இறக்குமதி
13.  Mobile phone - கைபேசி (அ) நகர்பேசி (அ) அலைபேசி
14.  Google Application Center - கூகுள் செயலி மையம்
15.  Database - தரவுத்தளம்
16.  Font - எழுத்துரு
17.  Thesarus - நிகண்டுகள்
18.  Disclaimer - பொறுப்பு அறிக்கை
19.  FAQ - ஐயமும் தீர்வும்
20.  CD - குறுந்தகடு
21.  Disable - முடக்கு
22.  User Id - பயனர் இத்து
23.  Password - கடவுச்சொல்
24.  Input tools - உள்ளீட்டு கருவிகள்.
25.  Cloud Computing tools - மேகக் கணிப்புக் கருவிகள்

இன்னும் போய்க்கொண்டே இருக்கலாம்.  இன்னும் வேண்டுமென்றால், இந்த இணைப்பிற்கு செல்லுங்கள்.
http://tamildictionary.50webs.com/

இதிலிருந்து புலப்படுவது என்னவென்றால் நவீன ஆங்கில சொற்களுக்கு நிகர் சொற்கள் நம் மொழியில் உள்ளன.   ஆனால் நாம் பயன்படுத்துவதே இல்லை என்பதே பெருங்குறை.

இன்னொரு செய்தி!  சில வலைத்தளங்கள் கூட தங்களது பெயர்களை தமிழில் மொழிபெயர்கிறார்கள்.  உதாரணமாக - Facebook: முகநூல்.

எனவே நண்பர்களே!  நம் உரையாடல்கள், எழுத்துக்கள் எல்லாம் முடிந்த வரை தமிழிலேயே இருக்கட்டும்.   முயர்ச்சிப்போமே - சரிதானே?

வாழிய செந்தமிழ்!  வாழ்க நற்றமிழர்!!
தமிழ்கூறும் நல்லுலகம் வாழ்க, வாழ்க!!!

Monday, January 18, 2016

சிறுவர்களுக்கான வலைப்பக்கங்கள்

நாடு விட்டு நாடு வந்திருக்கும் நம் அனைவரின் பெரிய சவாலே எப்படி நம் குழந்தைகளுக்கு தமிழில் எழுதவும், அதைத்தொர்ந்து பேசவும், படிக்கவும்   கற்று கொடுப்பது என்பது.  நம் காலத்தில் சிறுவர்களுக்கான பல விஷயங்கள் இருந்தன.  குறிப்பாக சிறுவர் புத்தகங்கள், மழலையர் கதைகள், படக்கதைகள் என்று.  இதனால் ஏற்படுகின்ற ஆர்வம் நம்மை அடுத்த தளத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது.  அதே போல் நம் குழந்தைகளுக்கு ஆர்வம் வர நாம் என்ன செய்ய முடியும்?

எனது எண்ணங்கள்.  சிரிப்பு வந்தால் நான் பொறுப்பில்லை.

1.  நாம் ஏன் நம் குழந்தைகளுக்கு குட்டி கதைகளை வீட்டில் எழுதக்கூடாது?  குறிப்பாக கூகிள் உள்ளீடுக்கருவி (http://www.google.com/inputtools/try/) வழியாக நாமே வாரம் ஒன்று அல்லது இரண்டு கதைகளை எழுதலாமே?  அதை நம் குழந்தைகள் முன் கொடுத்து படிக்க சொல்லலாமே?  இதில் நாம் ஆங்கிலத்தில் தட்டெழுத்து மட்டுமே செய்ய வேண்டும்.  முதலில் கடினமாக இருந்தாலும் போகப்போக நன்றாகவே இருக்கிறது இந்த ஒலிபெயர்த்தல் தமிழ் தட்டெழுத்து.

2.  ஒரு ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ் சொல்லை கண்டுபிடிப்பது எளிது.  நாம் செய்யவேண்டியதெல்லாம் தேடலே!  உதாரணமாக கூகிள் சென்று "How to say computer in tamil" என்று அடியுங்கள்.  அது உங்களுக்கு துல்லியமான ஒரு மொழிபெர்ய்பை கொடுக்கும்.  இதையே நம் குழந்தைகள் செய்ய ஊகுவிக்கலாமே.  இல்லையா?  அது மட்டும் அல்ல.   அந்த ஆங்கில வரியில் இடையே தமிழ் சொற்களை புகுத்தி ஆங்கில வார்த்தை என்ன என்று அறியலாம்,   கூகிள் தேடல் இயந்திரம் தானே மொழிக்கண்டுபிடிப்பு செய்யும்.
படம் 1: வலையில் தமிழில் தேடல் 
 

நேரம் கிடைக்காதவர்கள் கீழ்வரும் வலை மீத்தொடுப்புக்களை பார்க்கலாம்.  பிடித்தவற்றை வலை உலாவியின் பிடித்த பக்கங்களில் சேகரித்துக்கொள்ளலாம்.

http://www.siruvarmalar.com/kids-stories-list/
http://tamilsirukatai.blogspot.com/
http://www.koodal.com/jokes/fun_stories.asp

இது போல் மேலும் ஏதேனும் இணையதளவிலாசங்கள் இருந்தால் - நண்பர்களே அவைகளை பகிருங்கள்.

வாரம் ஒன்று அல்லது இரண்டு கதைகள் படித்தாலே குழந்தைகள் எங்கேயோ போய் விடலாம்.

இனி ஒரு விதி செய்வோம்.
மழலையர் மனதில் தமிழ் மொழிப்பற்று வளர்ப்போம்.

தமிழ்க்கூறும் நல்லுலகம் வாழ்க!


Sunday, January 17, 2016

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அன்புள்ளம் கொண்ட தமிழ் நல உள்ளங்களுக்கு இனிய வணக்கங்கள்!

சற்றே தாமதித்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களும் கூட.

ஒரு குருமுடக்கதிற்குப்பின்  எனது வலைப்பதிவை (ஒரு வழியாக) தொடங்குகிறேன்.

நேற்று எங்கள் (கன்சாஸ் நகர) தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா ஒரு பெரும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது!

திருக்குறள் போட்டி, ஒயிலாட்டம், கிராமிய நடனங்கள், பட்டிமன்றம் என்று நமது பாரம்பரியம் சார்ந்த பல நிகழ்சிகள் அரங்கத்தை களைகட்டின.    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும்,  அறுசுவை உணவை தயாரித்து வந்த நல்லுள்ளங்களுக்கும், நிகழ்ச்சிகள் நல்ல வண்ணம்  நடைபெற பெருந்துணை புரிந்த அனைத்து தன்னார்வர்களுக்கும் ஒரு பெரும் நன்றி.

மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தந்த சில விஷயங்கள்.

1) ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு, சென்ற ஆண்டு பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.  இந்த வருடம் அது தொடர்ந்தது ஒரு நிம்மதியை தந்தது.  இது ஒரு குறைந்தபட்ச கலாச்சார விழிப்புணர்வை நம் மக்கள் மத்தியில் உண்டாக்கும் என்று நம்பலாம்.  வரும் ஆண்டுகளில் தொடரவும் முயற்ச்சிகள் எடுக்கப்படவேண்டும்.

2) புனித லூயிஸ் (St. Louis) நகரிலிருந்து கரும்பு கொண்டு வரப்பட்டது.  பல் வலித்தாலும் இனிமை குறையாதது கரும்பு மட்டுமே.

3) தமிழ்கூர் நல்லலுலகத்தின் தன்னலமற்ற தன்னடக்கம் கொண்ட நம்மவர்கள்.  நம் நீண்ட நெடும் வரலாற்றின் பெரிய சான்று இது ஒன்று.  பக்குவத்தின் உச்சம்!

இந்த நிகழ்வுகள் புலம் பெயர்ந்த மண்ணில் எம்மை மகிழ்வித்தாலும், உள்ளூரில் நம் உரிமைபரிப்பு  தொடரும் போலும்.  காளையை அடக்குவது கொடூர செயலாம்.  இதை முடிவு செய்ய ஒரு உச்ச நீதி மன்றம்.  என்னே ஒரு விந்தை.  இந்த கோமாளி கிழங்களுக்கு யார் கொடுத்தது எனை ஆளும் உரிமை?  இதை மீறி களம் இறங்கி ஜல்லிக்கட்டு நடித்திக்காட்டிய எல்லோரையும் பாராட்ட வேண்டியுள்ளது.  வாழ்க உங்கள் செயல்!

நண்பர்களே - இந்த ஆங்கில புத்தாண்டில் நம் மொழியாம் தமிழை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க நாம் எல்லா முயற்சியும் எடுப்போம்.  நம் உரையாடல், கவிதைகள், கருத்துப்பரிமாற்றங்கள் எல்லாம் தமிழிலேயே இருக்கட்டும்.

வாழிய செந்தமிழ்!  வாழ்க நற்றமிழர்!!

தமிழ்கூறும் நல்லுலகம் வாழ்க!!!